ஏஐ தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் .

Published Date: December 18, 2024

CATEGORY: EVENTS & CONFERENCES

செயற்கை நுண்ணறிவு (ஏஐ ) தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சிஐஐ கனெக்ட் 2024 மாநாடு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பேசியதாவது:

மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் உள்ள பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வல்லுனர்களாக பணியாற்றுவதில், 20% தமிழகத்தை சேர்ந்தவர்களே. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் 80 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழகத்தை சேர்ந்தவர்களே பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிறுவனங்களின் வணிக செயல்பாட்டுகளை எளிதாக்கும் வகையில் தமிழக அரசு தனது பங்களிப்பை அதிகமாக வழங்கி வருவதுடன், தமிழகத்தை உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அதிகாரம் மையமாக மாற்றும் நடவடிக்கையிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஏஐ தகவல் தொழில்நுட்பத்தில் தமிழகம் முன்னிலையில் இருந்து வரும் நிலையில் ஸ்டார்ட் டப் நிறுவனங்களை ஊக்குவித்து அதன் மூலம் திறமை மிக்க ஊழியர்களை உருவாக்குதல், ஏஐ தகவல் தொழில்நுட்பத்தின் வழிகாட்டுதல்களுக்கான கொள்கைகள் உருவாக்கலுக்கும் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார் அவர்.

இந்த நிகழ்ச்சியில் 'சிஐஐ கனெக்ட்' நிறுவனத் தலைவர் மற்றும் டிசிஎஸ் முன்னாள் தலைமை நீதி அதிகாரி மகாலிங்கம், 2024 தலைவரும் வீல்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனருமான ஸ்ரீவத்ஸ் ராம், சிஐஐ தென் பிராந்திய தலைவர் மற்றும் சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் நந்தினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinamani